முதலுதவி செய்த எஸ்.பி. விஜயகுமார். 
தமிழகம்

தசைப்பிடிப்பு ஏற்பட்ட காவல் ஆய்வாளருக்கு முதலுதவி செய்த செங்கல்பட்டு எஸ்.பி.

செய்திப்பிரிவு

காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட காவல் ஆய்வாளருக்கு செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் முதலுதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று (அக். 22) நடைபெற்றது. இந்தத் தேர்தலையொட்டி அங்கே பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரும், மருத்துவருமான விஜயகுமார் அங்கே வந்திருந்தார்.

அப்போது, அங்கே பணியிலிருந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் ஓடிவந்தார். காலில் தசைப்பிடிப்பு ஏற்பட விழுந்துவிட்டார். அதைக் கவனித்த, காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ஒரு மருத்துவரும் என்பதால், காவல் ஆய்வாளர் ருக்மாங்கதனுக்கு முதலுதவி சிகிச்சை செய்தார்.

எஸ்.பி. விஜயகுமார்: கோப்புப்படம்

மருத்துவத்துடன் மனிதநேயமும் இணைந்து காவல் கண்காணிப்பாளர் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டதையும், கனிவுடனும் கருணையுடனும் விசாரித்ததையும் அங்கே இருந்தவர்கள் வியப்புடனும் நெகிழ்வுடனும் பார்த்தார்கள்.

காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னதாகப் பணியாற்றியபோது, வாணியம்பாடி பகுதியில் சாலையில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவருக்கு, அந்த வழியே சென்றபோது, முதலுதவி கொடுத்து மருத்துவமனையில் அவரை அனுமதித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. அப்போது கரோனா ஊரடங்கு காலகட்டம் என்பதும் அந்த முதியவரை நெருங்கவே மக்கள் பயந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையில், உயரதிகாரிகளிடம் நெருங்கவே தயங்கும் சூழலில், அதிகார மனோபாவமில்லாமல், மனித நேயத்துடன் எல்லோரிடமும் அணுகுகிற காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் நல்ல முன்னுதாரணம்.

வீடியோ பார்க்க:

SCROLL FOR NEXT