புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதால் நன்னடத்தை விதிகள் தொடர்வதால் பயனில்லை எனக் குறிப்பிட்டு, அதை நீக்கி மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியைக் கடந்த மாதம் 22-ம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாகக் கூறி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உட்பட 3 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதையடுத்து முதல்கட்ட வேட்புமனுத் தாக்கலான 30-ம் தேதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. குளறுபடிகளைச் சரிசெய்து புதிய அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலத் தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 2-வது முறையாகத் தேர்தல் தேதியை அறிவித்தது. இது அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டமும் நடத்தின.
திமுக மாநில அமைப்பாளர் சிவா, இட ஒதுக்கீடு ரத்து அறிவிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து 21ஆம் தேதி வரை தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டாலும், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகளைத் தளர்த்தக் கோரி ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், கூட்டணிக் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், சுயேச்சை மற்றும் நியமன எம்எல்ஏக்கள் அடங்கிய அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம் கடந்த 13-ம் தேதி மனு தந்தனர். ஆனால், தேர்தல் ஆணையர் இதை ஏற்க மறுத்து, நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 21-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. தேர்தலை நிறுத்திவைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வெளியிட்ட உத்தரவில், சட்ட ஆலோசனை அறிவுறுத்தல்படி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறுகள் தள்ளிப்போவதைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்வது பயனற்றவை என்று குறிப்பிட்டு அதை நீக்கியுள்ளார்.