ஆலங்காயம் ஒன்றியத்தில் அதிமுக, பாமக கவுன்சிலர்களின் ஆதரவோடு திமுக கவுன்சிலர் சங்கீதா ஒன்றியக் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக 11 இடங்களிலும், அதிமுக 4 இடங்கள், பாமக 2 இடங்கள், ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றனர். திமுக 11 இடங்களைக் கைப்பற்றியதால் ஒன்றியக்குழுத்தலைவராக திமுக கவுன்சிலர்களின் ஒருவர் ஒன்றியக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜின் மருமகளும் 7-வது வார்டு கவுன்சிலருமான காயத்ரியை ஒன்றியக் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க சில கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் ஆதரவுடன் 6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதாவை ஒன்றியக் குழுத்தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும் என சில கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
இதனால், ஆலங்காயம் ஒன்றியக் குழுத்தலைவர் பதவியைக் கைப்பற்றத் திமுகவினரிடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த 22-ம் தேதி பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த திமுக, அதிமுக, பாமக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க இரு தரப்பினரும் முயன்றபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது. இதனால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆளும் கட்சி கவுன்சிலர்கள் மீதே காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, காயத்ரிக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்கள் திருவண்ணாமலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல, சங்கீதாவுக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஒன்றியக் குழுத்தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. மறைமுகத் தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில் ஆலங்காயத்தில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்குத் தடுப்புகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகு அந்த வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் பகுதிக்கு வந்த பேருந்துகளும் 1 கி.மீ. தொலைவுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு, பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். பாதுகாப்பு கருதி செய்தியாளர்களும் ஒன்றிய அலுவலகம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மறைமுகத் தேர்தலில் தேர்தல் அதிகாரி, உதவித் தேர்தல் அதிகாரி, ஆலங்காய ஒன்றிய கவுன்சிலர்கள் 18 பேர் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
6-வது வார்டு சங்கீதா தன் ஆதரவு கவுன்சிலர்களுடன் இன்று காலை 6.30 மணிக்கே ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தார். 7-வது வார்டு கவுன்சிலர் காயத்ரி காலை 9.30 மணிக்கு, தன் ஆதரவு கவுன்சிலர்களுடன் வந்தார்.
இதனைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஒன்றியக் குழுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க கவுன்சிலர்களுக்குத் தேர்தல் அலுவலர் அழைப்பு விடுத்தார். அப்போது, ஒன்றியக் குழுத்தலைவர் பதவிக்கு, சங்கீதா தான் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, காயத்ரியும் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். அதன்பிறகு, சங்கீதா ஆதரவு கவுன்சிலர்களுக்கு முதலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதைக் கண்டித்த காயத்ரி மறைமுகத் தேர்தல் முறையாக நடக்கவில்லை, முறைகேடு நடக்கிறது எனக் குற்றம்சாட்டி தன் ஆதரவாளர்கள் 6 கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
இதைத்தொடர்ந்து, சங்கீதாவுக்கு ஆதரவாக 5 திமுக கவுன்சிலர்கள், 4 அதிமுக கவுன்சிலர்கள், 2 பாமக கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 12 பேர் வாக்களித்தனர். காயத்ரியுடன் 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால், 12 வாக்குகள் பெற்ற சங்கீதா ஒன்றியக் குழுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே, காயத்ரி தன் ஆதரவாளர்களுடன் வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, திமுக இளைஞரணி நிர்வாகி திருநாவுக்கரசு என்பவர் தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு திடீரெனத் தீக்குளிக்க முயன்றார். உடனே, காவல் துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர்.
’’மறைமுகத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. காலை 10 மணிக்கு தலைவர் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 6.30 மணிக்கே சங்கீதா தன் ஆதரவாளர்களுடன் ஒன்றிய அலுவகத்துக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கியது யார்? இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ எனக்கூறி காயத்ரி தன் ஆதரவு கவுன்சிலர்களுடன் சேர்ந்து, வருவாய்க் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனு மீது விசாரணை நடத்துவதாக அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதன்பிறகு மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவோடு 6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ஒன்றியக் குழுத்தலைவராக வெற்றி பெற்றுள்ளது திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.