தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே அமைக்கப்பட்டுள்ள 3-வது புதிய பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழு, மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி நேற்று சோதனையை நிறைவு செய்துள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ரயில்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
ரூ.256 கோடியில் 3 கட்டமாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இறுதியாக பணி நிறைவு செய்யப்பட்டுள்ள கூடுவாஞ்சேரி - தாம்பரம் இடையிலான 3-வது புதிய பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் உட்பட 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையில் ஆய்வு நடத்தினர்.
தண்டவாளத்தில் முதல்கட்டமாக டிராலி மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு, ரயிலை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ``தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது பாதையில் இறுதியாக பணிகள் நிறைவு செய்யப்பட்ட தாம்பரம் - கூடுவாஞ்சேரி தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு ஆய்வை நிறைவு செய்துள்ளனர்.
தண்டவாளம், ரயில் நிலையங்கள் கட்டமைப்பு சார்ந்த தகவல்களையும், தொழில்நுட்ப மேம்பாட்டு வசதிக்கான தகவல்களையும் அவரிடம் அளித்துள்ளோம். எனவே, அடுத்த 2 வாரங்களில் இந்த பாதையில் ரயிலை இயக்க ஒப்புதல் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்த தண்டவாளம் ரயில் இயக்கத்துக்கு வரும்போது தென் மாவட்ட விரைவு ரயில்கள், மின்சார ரயில்களை தாமதம் இன்றி இயக்க முடியும். மேலும், தேவை ஏற்படும்போது கூடுதல் ரயில்களை இயக்கவும் பரிசீலிக்கப்படும்'' என்றனர்.