தமிழகம்

புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் 25-ம் தேதி தடுப்பூசி திருவிழா: முதியோருக்கு இல்லம் தேடி வந்து போடப்படும்

செய்திப்பிரிவு

புதுச்சேரி சுகாதாரத்துறை மூலமாக வரும் 25-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது என்று சுகாதாரத்துறை இயக்குநர் ராமலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க புதுச்சேரி அரசு, சுகாதாரத்துறை மூலமாகபல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஓரு அங்கமாக வரும் 25-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதாரத்துறை தடுப்பூசி முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தலின்படி ‘‘நாங்க போட்டுக்கிட்டோம், நீங்க போட்டுக்கிட்டீங்களா?’’ என்ற கருவுடன் இந்த திருவிழா நடைபெறும்.

புதுச்சேரி மாநிலத்தில் சராசரியாக 70 விழுக்காடு மக்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துள்ளனர். இன்னும் 30 விழுக்காட்டினர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. 100 சதவீதம் எடுத்துக்கொண்டால் தான் இந்த கொடிய நோயிலிருந்து நாம் அனைவரும் மீண்டு இயல்புநிலைக்கு செல்ல முடியும். அதனால் இந்த தடுப்பூசி திருவிழாவில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீதம் தடுப்பூசி பெற்ற முன்மாநிலமாக மாற்ற வேண்டும்.

வாகன வசதி இல்லாதோரும், முதியோர்களும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமாயின் எங்களின் 24 மணி நேர 104 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் இல்லம் தேடி வந்து தடுப்பூசி போடப்படும்.

மேலும் மக்களுக்கு ஏற்படும் தடுப்பூசி குறித்த சந்தேகங்களை தீர்க்க, 104 என்ற தொலைபேசி சேவையை மக்கள் தொடர்பு கொண்டால் மருத்துவர்கள் அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் தருவார்கள். தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் யாருக்கும் இதுவரை ஒவ்வாமை போன்ற எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.

தடுப்பூசி எடுத்துக்கொள்வது மட்டுமல்லாது, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வது போன்றபழக்கங்களையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT