தமிழகம்

குலுக்கலில் ஆடு, 4 கிராம் தங்கம் பரிசு: திருவாரூர் ஜவுளிக்கடைக்குக் குவியும் பாராட்டு

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திரூவாருரில் உள்ள ஜவுளிக்கடையில் தீபாவளிக்கு ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் நடத்தி தங்க நாணயம், ஆடு, பட்டுப்புடவைகள் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்குப் புத்தாடை வாங்கும் பொதுமக்களைக் கவர்வதற்காக பல்வேறு பரிசுக் குலுக்கலை ஜவுளிக்கடைகள் நடத்தி பரிசுகளை வழங்கி கவனத்தை ஈர்த்துவருவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு நடத்தப்படும் குலுக்கலில் வீட்டு உபயோகப் பொருட்கள், துணி வகைகளைத்தான் பரிசாக அறிவிப்பார்கள். ஆனால் திருவாரூர் ஜவுளிக்கடை ஒன்றில் பரிசுப்பொருளாக தங்கம், ஆடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனியைப் பூர்வீகமாகக் கொண்ட மணிமுருகன் கடந்த 17 வருடமாக திருவாரூரில் ஜவுளிக் கடையை நடத்தி வருகின்றார். அப்போதிலிருந்தே தனது வாடிக்கையாளர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கியும், கடனாக ஜவுளியைக் கொடுத்தும் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துள்ளதோடு தற்போது மொத்த வியாபாரம், மற்றும் சில்லரை வியாபாரம் இரண்டையும் செய்து வருகிறார்.

இந்த ஜவுளிக்கடையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தீபாவளிப் பண்டிகை பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்கம், இரண்டாவது முதல் நான்காவது பரிசு வரை 4 பேருக்கு ஆடு, 5 வது பரிசாக 25 பேருக்கு பட்டுப்புடவை என அறிவித்துள்ளார். இவற்றில் ஆடுகளைப் பரிசாக அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் மணிமுருகன் கூறும்போது, ’’கரோனா அச்சத்தால் ஏற்பட்ட ஊரடங்கு அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. பலரும் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர் சுயதொழில் ஒன்றே இனி, தனி நபரையும், குடும்பத்தையும் நாட்டையும் காப்பாற்றும் என்பதை அனைவரும் உணரத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கு ஓர் ஊக்கமாகவும் தூண்டுகோலாகவும் என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஆடுகளைத் தரலாம் என்ற எண்ணம் தோன்றியது.

அடிப்படையிலேயே விவசாயத்தைப் பின்புலமாகக்கொண்ட மாவட்டம் என்பதால், எனது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆடு வளர்ப்பு அறிந்தவர்கள் என்ற அடிப்படையில் ஆடு வழங்குவதாக அறிவித்தோம்.

இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடையில் வியாபாரம் அதிகரித்துள்ளது. நான் எப்படி மகிழ்ச்சி அடைகின்றேனோ அதேபோல ஆட்டைப் பரிசாகப் பெற்று, அதன் மூலம் பொருளாதார ஏற்றம் பெற்றால் இறைவனே ஆசிர்வதித்தாக உணர்வேன்’’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT