ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அதிமுக மேற்கொண்ட அரசியல் தந்திரம் இது என்று பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தனியாக தேர்தலை சந்தித்தால், மக்களின் உண்மையான மனநிலை தெரியவரும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் களை மத்திய அரசுதான் விடுதலை செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பது, மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாது. திமுக-வுக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் காங்கிரஸ், திமுகவின் நிலைப்பாடு ஒன்றாக இருக்காது. எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அதிமுக மேற்கொண்ட அரசியல் தந்திரமே இது என்றார்.