நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் காரில் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் சென்னை மெரினா உட்புறச் சாலையில் பேரணியாக சென்றனர். படம்: க.பரத் 
தமிழகம்

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு: சென்னை வந்த தேசிய பாதுகாப்பு படையினரின் கார் பேரணி

செய்திப்பிரிவு

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் கார்பேரணி நேற்று சென்னை வந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்றதன்75-வது ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை சார்பில் ‘சுதர்சன் பாரத்பரிக்ரமா' என்ற கார் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இது கடந்த அக். 2-ம் தேதி புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட லக்னோ, வாராணசி, கொல்கத்தா, ஹைதராபாத் வழியாக நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தது.

இந்த பேரணியில் பங்கேற்ற வீரர்கள் நேற்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திலகர் திடல் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இந்தக் கார் பேரணியை தலைமை ஏற்று நடத்திவரும் கர்னல் உமேஷ் ரத்தோட், தேசிய மாணவர் படை மாணவர்களிடம் உரையாடினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒற்றுமை, சகோதரத்துவம் தேசப்பற்று உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பயணித்து வருகிறோம். பிரதமர் அறிவித்துள்ள ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவம்’ கொண்டாட்டத்தில் தேசிய பாதுகாப்புப் படையினரான நாங்கள் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் பேரணி அடுத்து பெங்களூரு சென்று, பின்னர் பல்வேறு நகரங்கள் வழியாக அக். 30-ம் தேதி புதுதில்லியை அடைய உள்ளது. இந்தக் குழுவில் 12 அதிகாரிகள், 35 கமாண்டோ வீரர்கள் உள்ளனர். அதோடு 15 டாட்டா ஹாரி கார்களும் இடம் பெற்றுள்ளன.

இளைஞர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் வருங்காலம் வளமானதாக அமையும். இந்தச் சிறப்பான பயணத்தில் சென்னையில் நாங்கள் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். எங்களை வரவேற்ற தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் சென்னை மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சென்னை வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி பள்ளிக்குச் சென்ற கார் பேரணியை, பயிற்சி பள்ளிப் இயக்குநர் அமல்ராஜ் வரவேற்று, வாகனப் பேரணியை பெங்களூருக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

SCROLL FOR NEXT