தமிழகம்

மொழி சர்ச்சையால் நீக்கப்பட்ட ஊழியர் மீண்டும் பணியில் சேர்ப்பு: சொமாட்டோ நிறுவனம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

இந்தி தேசிய மொழி என்று கூறியதால் சர்ச்சைக்குள்ளாகி நீக்கப்பட்ட ஊழியர், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ‘சொமாட்டோ’ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

உணவு டெலிவரி வழங்கும் ‘சொமாட்டோ’ நிறுவனத்தின் செயலி வழியாக தமிழக இளைஞர் ஒருவர் கடந்த அக்.18-ம் தேதி உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு உணவு முழுமையாக வராததால், அந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதற்கு ‘சொமாட்டோ' நிறுவன ஊழியர் இந்தி மொழியில் பதிலளித்துள்ளார். அதற்கு தமிழக வாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவிக்க, ‘இந்தி நமது தேசிய மொழி. எனவே, அனைவரும் அதைச் சிறிதளவு தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று அந்நிறுவன ஊழியர் பதில் அனுப்பியுள்ளார்.

இதை தமிழக வாடிக்கையாளர் சமூக வலைதளங்களில் பகிரவே விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியரை பணிநீக்கம் செய்த ‘சொமாட்டோ’ நிறுவனம் இந்த நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரியது. இந்நிலையில் நீக்கப்பட்ட பெண் ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவதாக ‘சொமாட்டோ’ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ‘சொமாட்டோ’ நிறுவனர் தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

வாடிக்கையாளர் மையத்தில் ஒருவர் அறியாமல் செய்த தவறு தேசியபிரச்சினையாக மாறியுள்ளது. நம்நாட்டில் சகிப்புத்தன்மை தற்போதைய அளவை விட இன்னும் அதிகரிக்க வேண்டும். அதன்படி நீக்கப்பட்ட பெண் ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறோம். இந்த ஒரு காரணத்துக்காக மட்டும் அவரை பணிநீக்கம் செய்ய விரும்பவில்லை.

எங்கள் வாடிக்கையாளர் மையங்களில் இளைஞர்கள்தான் உள்ளனர். தங்கள் பணிக்காலத்தின் ஆரம்ப நிலையில் உள்ள அவர்கள் மொழி, மாநிலம் குறித்த விஷயங்களில் பெரிய நிபுணர்கள் இல்லை. எனவே, நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் ஒழுங்கற்ற தன்மைகளை சகித்துக் கொள்ள வேண்டும். அதேநேரம் ஒருவர் மற்றவரின் மொழியையும், அந்த மண்ணின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். நாட்டின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்தையும் நேசிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT