மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் பொறுப்பேற்றார். இவர் போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார்.
ஏற்கெனவே இவர் 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை கடந்த 10 ஆண்டுகள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். அதன் பின்னர் சுழற்சி முறையில் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிபட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிட முடியவில்லை.
தற்போது பொதுப் பிரிவினருக்கு மாறியதைத் தொடர்ந்து அவர் மீண்டும் போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விழா மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மேல்மருவத்தூர் கிராம மக்கள் சுமார் 500 பேர் பங்கேற்றனர். செவ்வாடை தொண்டர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.