கூட்டணி வைக்க தேமுதிகவுடன் பேரம் எதுவும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை தங்கள் கூட் டணிக்குள் கொண்டுவர மாநிலங் களவை உறுப்பினர், மத்திய அமைச்சர் பதவி தருவதாக பாஜக பேரம் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘‘அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரம் இல்லாமல் எந்தக் குற்றச்சாட்டையும் கூறக் கூடாது. தேமுதிகவுடன் பாஜக பேரம் பேசியதாகவும் ஆனால், பேரம் படியவில்லை என்றும் வைகோ கூறியிருக்கிறார். எதனால் பேரம் படிய வில்லை என்பதையும் அவர் கூற வேண்டும். தேமுதிக வுடன் பாஜக பேரம் பேசியதாக கூறியதன் மூலம் விஜயகாந்தையும், அவரது மனைவி பிரேமலதாவையும் வைகோ கொச்சைப்படுத்தி உள்ளார். இதை தேமுதிகவினர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் போது, ‘‘எந்த ஆதாரமும் இல்லாமல் மிகவும் மோசமான குற்றச்சாட்டை வைகோ முன் வைத்துள்ளார். பாஜக யாரிடமும் பேரம் பேசவில்லை. பேரம் பேச வேண்டிய அவசியமும் இல்லை. பேரம் பேச விஜயகாந்த் ஒன்றும் கடை சரக்கல்ல’’ என்றார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறும்போது, ‘‘தேமுதிகவிடம் பாஜக பேரம் பேசியதாக பொறுப்பற்ற முறையில் பேசிய வைகோ, அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். இல்லையெனில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். வைகோ போன்ற நிலையற்ற தலைவரை நம்பி விஜயகாந்த் கூட்டணி வைத் திருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது’’ என்றார்.