தமிழகம்

தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேர்தல் பார்வையாளர்கள் கண் காணிப்பில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயல கத்தில் தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ராஜேஷ் லக்கானி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜோதி, தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பி.சாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மூர்த்தி, தேமுதிக இலக்கிய அணி செயலாளர் ரவீந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறி ஞர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு நிருபர் களிடம் ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிகள், செலவு கணக்கு விவரம், வேட் பாளர் புகைப்படம், தேர்தல் பணியில் தகவல் தொழில்நுட்பம் ஆகிய நான்கு விஷயங்கள் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மதுபான விற்பனை, வங்கிக் கணக்கு பரிவர்த்தனை, தேர்தல் குறித்த புகார், விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தகவல் தொழில்நுட்பரீதியான அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கு எடுத்துரைக்கப் பட்டது.

வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை எப்படி எழுதுவது என்பது குறித்து வேட்புமனு தாக்கல் தொடங்கிய பிறகு பயிற்சி அளிக்கப்படும். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கட்சி சார்பில் விளம் பரம் செய்யும்போது அதற்கு அனுமதி பெற வேண்டும். தேர்தலில் வாக்களிக்கக் கோரி நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரம் செய்தால் அதற்கும் அனுமதி பெற வேண்டும்.

வெள்ள நிவாரணம் தரக்கூடாது

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வெள்ள நிவாரணம் தரக்கூடாது. அப்படியே தரவேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். பல்லாவரத்தில் வெள்ள நிவாரண நிதி கொடுத்ததாக திமுக தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. அதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கேட்கப்பட் டுள்ளது. வெள்ள நிவாரணம் கொடுத்ததில் வங்கியின் தவறுகூட இருக்கலாம். எனவே, அதுபற்றி மாவட்ட ஆட்சியர் கருத்து பெற்ற பிறகு நடவடிக்கை எடுக்கப் படும்.

அரசியல் கட்சிகள் வழங்கும் பூத் சிலிப்பைக்கொண்டு வாக் களிக்க முடியாது. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணை யத்தின் பூத் சிலிப்பைப் பெற்று, அதைக் காட்டி வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் பூத் சிலிப் சரியாக விநியோகிக்கப்படுவ தில்லை என்று புகார்கள் வருகின் றன. எனவே, தேர்தல் பார்வை யாளர்கள் மேற்பார்வையில் பூத் சிலிப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாடி முன்பு வாக்குச்சாவடி அதிகாரியும் அமர்ந்து தேவைப்படு வோருக்கு பூத் சிலிப் வழங்கு வார்.

வேட்பாளர் புகைப்படம்

வேட்பாளரின் படம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம் பெறும். அதற்கான படம் எப்படி இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேட்பாளரின் படம், தேர்தல் அறிவிக்கை வெளியான தேதியில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வேட்பாளரின் முழு முகம், திறந்த கண்ணுடன் வெள்ளை அல்லது சாம்பல் நிற பின்னணியில் 2 செ.மீ. அகலம், இரண்டரை செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும். வேட்பாளரின் வசதிக்கேற்ப கருப்பு வெள்ளை நிறத்திலோ அல்லது வண்ணத்திலோ இருக்கலாம். சாதாரண ஆடையில் புகைப்படம் இருத்தல் அவசியம். சீருடையுடன் கூடிய புகைப்படம் ஏற்கப்பட மாட்டாது. கருப்பு கண்ணாடி, தொப்பி தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

1950 அழைப்பு மையம்

இதற்கிடையே, தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தல் தொடர்பான புகார்களை பெறுவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தின் 7-வது தளத்தில் தேர்தல் துறை சார்பில் 40 இருக்கைகள் கொண்ட ‘1950’ அழைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம். அதேநேரம் இன்று (27-ம் தேதி) தலைமைச் செயலகத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ‘1950’ அழைப்பு மையம் குறைவான இருக்கைகளுடன் செயல்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT