தமிழகம்

தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ நியமனம்: மதிமுக அதிரடிக்கு என்ன காரணம்?

செய்திப்பிரிவு

மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் ‘போர்வாள்’ என அனைவராலும் அழைக்கப்பட்ட வைகோ, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவைத் தொடங்கினார். தொடக்க காலத்தில் இளைஞர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்த மதிமுக, தமிழகத்தில் நங்கூரம் பாய்ந்த கட்சியாக உருவெடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த அளவுக்கு ஏற்றம் காணப்பட்ட மதிமுக, தேர்தல் மற்றும் அரசியலில் ஏற்பட்ட சரிவு காரணமாக வீழ்ச்சியை சந்தித்தது.

திமுக - அதிமுகவுடன் மாறி மாறிக் கூட்டணி அமைத்தல், தனித்துப் போட்டி, தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்குத் தலைமை வகித்தது என ஒவ்வொரு தேர்தலிலும் தலைமையின் நிலைப்பாடுகள் மாறுபட்டு இருந்ததால், மக்கள் புறக்கணிக்கின்றனர் எனக் கூறி, வைகோ மீது மூத்த தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செஞ்சி ராமச்சந்திரன், பொன்.முத்துராமலிங்கம், எல்.கணேசன், கண்ணப்பன், மாசிலாமணி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில், வைகோவின் உடல்நிலையும் ஒத்துழைப்பு கொடுக்காததால் கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் எதிரொலியாக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு மதிமுக வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர். இதுதான், வைகோவின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்துள்ளது.

இந்நிலை தொடர்ந்தால், மதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என சிந்தித்த வைகோ, கட்சியைக் காப்பாற்றுவதற்காக வியூகம் வகுக்கத் தொடங்கினார். கட்சியில் 2-ம் கட்டத் தலைவர்களாக உள்ள மல்லை சத்யா, ஈரோடு கணேசமூர்த்தி உள்ளிட்டவர்களை ஏற்க மற்றவர்கள் முன்வரவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், தனது மகன் துரை.வைகோவை, தமிழக அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்தத் தொடங்கினார் வைகோ. அதற்கான களமாக, கரோனா பேரிடர்க் காலம் அமைந்தது. அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நண்பர்கள் குழுவுடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தங்களது வாகனங்களில் அழைத்துச் சென்றது, கரோனா 2-வது அலையின்போது அவசர சிகிச்சை மையத்துக்கு மருத்துவக் குழுவை அழைத்து சென்றது என மக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணித்து கொண்ட துரை.வைகோ, மக்களிடம் எளிதாக அறிமுகமானார்.

இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்ற வைகோ, ‘எனது மகன் அரசியலுக்கு வருவதில் துளிகூட விருப்பமில்லை. அவர், அரசியலுக்கு வருவது, 20-ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அந்த முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்’ எனக் கூறி, மகனின் அரசியல் வருகையை சூசகமாக வெளிப்படுத்தினார். அதன் எதிரொலியாக, மதிமுகவில் துரை.வைகோவுக்கு முக்கிய பதவி வழங்க வலியுறுத்தி மாவட்ட செயற்குழு கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்தின்போது, திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றியதுபோல் மதிமுகவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT