புதுச்சேரி மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகள் இன்றும் நம் கண்முன் வந்துபோகின்றன.
புதுச்சேரி பகுதியானது பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதாலும், பல்வேறு தொழில்துறை சார்ந்த அபாயங்களையும் கருத்தில் கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது இந்த இயற்கை பேரிடர்கள் மற்றும் தொழில் சார்ந்த அபாயங்களை திறம்பட எதிர்கொள்ளும் விதமாக தொடர்புடைய பல்வேறு துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த மற்றும் ஒத்திசைவு பயிற்சியினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இது தவிர, தன்னார்வ நிறுவனங்கள், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள், பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த தன்னார்வலர்களின் தயார்நிலை மற்றும் பதில் இயக்க நேரத்தை சோதிக்க பல்வேறு நிலைகளில் ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பேரிடா் காலங்களில் சூழ்நிலைக்கேற்ப திறம்பட செயல்பட 61 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு குடிமை தற்காப்பு பாதுகாப்பு தன்னார்வலர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறையால் 8 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாம் கோரிமேடு பயிற்சி பள்ளியில் இன்று (அக்.20) தொடங்கியது. இது வருகின்ற 28-ம் தேதி வரை நடக்கிறது. வருவாய், காவல்துறை, தீயணைப்பு , சுகாதாரம், பொதுப்பணித்துறை, மின்சாரம், சமூக நலன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்ற பலவேறு துறைகளைச் சேர்ந்த அனுபவமிக்க அதிகாரிகளால் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியின்போது வகுப்பறைப் பாடம் மற்றும் உடற்பயிற்சி, யோகா ஆகியவையுள் இடம்பெற்றுள்ளது. அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக்குழுவும் மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளது. எதிர்வரும் பருவமழை காலத்தில் இந்த தன்னார்வலர்கள் திறம்பட மீட்பு பணிகளில் செயல்பட இப்பயிற்சி உதவும்.
இந்த பயிற்சி முகாமை துணை ஆட்சியர் ரிஷிதாகுப்தா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஐஏஎஸ் அதிகாரி கிரிசங்கர், துணை ஆட்சியர் தமிழ்செல்வன் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.