ரோஹித் 
தமிழகம்

புதுச்சேரி: இயக்குநர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

அ.முன்னடியான்

திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானம் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்தத் தடைகள் நீக்கப்பட்டு மைதானத்தில் இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், துத்திபட்டு மைதானம் மூடப்பட்டபோது இளங்கோவடிகள் அரசுப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

உடனே பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்துள்ளார். ஆனால் அவர்கள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் எனக் கூறியுள்ளனர். மேலும் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது.

இதையடுத்து சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். அதன்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் பள்ளிச் சிறுமியிடம் பயிற்சியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதன் மீது கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காததும் உறுதியானது.

இதையடுத்து இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சிவசாமி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.

இதில் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோஹித் பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் ஆவார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT