நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிமுக ஆளுநரிடம் புகார்க் கடிதம் அளித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்தோம். மேலும் தேர்தல் ஆணையம் இத்தேர்தலில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினர் நிகழ்த்திய அராஜகப் போக்கு மற்றும் பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமான விவரங்களையும் உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தோம்.
விரைவில் நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் ஐனநாயக முறையில் நோரமையாக தேர்தல்களை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதம், புகார் விவரங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களை இன்று காலை (20.10.2021 - புதன்கிழமை), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கப்பட்டது.
அப்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களான, முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், அதிமுக அமைப்புச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து வழங்கினர்’’.
இவ்வாறு அதிமுக தெரிவித்துள்ளது.