முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவை தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சில விவரங்களை, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் அ.பிரம்மா கேட்டிருந்தார்.
அதற்கு, அரசின் பொதுத்தகவல் அலுவலர் அளித்துள்ள பதில்: தமிழகத்தில் கடந்த 2001 முதல்2021 வரை மொத்தம் 24 விசாரணைஆணையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 25.9.2017-ல்அமைக்கப்பட்டது.
கால வரையறை நீட்டிப்பு
22.11.2017-ல் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு இதுவரை ரூ.3.52 கோடி செலவு செய்யப்பட்டுஉள்ளது. இதுவரை, 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. விசாரணை ஆணையத்தின் காலவரையறை 2022 ஜன. 24 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்துக்கு ரூ.4.23 கோடி செலவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.