தமிழகத்தில் ஊழலை ஒழிக்க அனைத்து கட்சிகளும் தனித்தே போட்டியிட வேண்டும் என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தேமுதிக அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். சிறியக் கட்சிகளை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்காமல், எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும்.
கூட்டணி அமைப்பதே கொள்ளை அடிக்கத்தான் என்ற எண்ணம் மக்கள் மனதில் பரவலாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்பு வரை ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன. ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இது மக்களை ஏமாற்றும் செயல். இந்தியாவிலேயே தமிழகம் தான் ஊழலில் முதன்மை மாநிலமாக உள்ளது என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இது தமிழக வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அவமானமாகும். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சியும் தனித்தே போட்டியிட வேண்டும்.