தமிழகம்

கட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்: ஜெ. பாதையில் மக்கள் மனங்களை வெல்வோம் என சூளுரை

செய்திப்பிரிவு

பொதுச் செயலாளர் என்ற பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீரென கடிதம் எழுதியுள்ளார். "அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொன்விழாவை யொட்டி தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் தொடங்கியுள்ள சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று திடீரென கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கம் ஆகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா கண்ட வழியில், எம்ஜிஆர் கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி, ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்.

மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அதிமுக நாடு ஆண்டதையும் அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமோ, சிந்தியுங்கள். எத்தனை, எத்தனை இன்னல்களைக் கடந்த ஜெயலலிதா சென்ற வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம். நீங்கள் நினைப்பது புரிகிறது. தொண்டர்களே உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது. கழகம் காக்கப்படும். மக்கள் ஒற்றுமை உயிர்பெறும். காலத்துக்காக காத்திருப்பவன் ஏமாளி. காலத்தைக் கைப்பற்றுபவன் புத்திசாலி.

எதிர்காலத்தை நம் கழகத்தின் கையில் கொண்டு வர சூளுரைப்போம். அஞ்சாது உறுதி ஏற்போம். மக்களுக்காய் நாம் இருப்போம். நமக்காக மக்கள் இருப்பார்கள். கழகத்தின் பாதையில் ஜெயலலிதா காணாத சோதனையா, இடர்பாடா. அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாம் அறிவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம்அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே, நான் இருக்கிறேன்என்பதைவிட நாம் இருக்கிறோம். ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும். அம்மா பாதையில்மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம். நம் தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம், சாதிப்போம்.

கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம் வெற்றிப் பயணத்தை, தொண்டர்களின் துணையோடும், மக்களின் பேராதரவோடும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்று கடிதத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT