மண்ணிவாக்கம் பகுதியில் நீர்வள ஆதார துறை சார்பில் சீரமைக்கப்பட்ட கால்வாய். 
தமிழகம்

வடகிழக்கு பருவமழை காலத்தை ஒட்டி கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்குவதை ஒட்டி செங்கல்பட்டு நீர்வள ஆதாரத் துறை சார்பில் கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏரிகளில் மதகுகள் சீரமைப்பு, கரைகளை பலப்படுத்துதல், வரத்து கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக கூடுவாஞ்சேரி, நந்திவரம், மண்ணிவாக்கம், வண்டலூர் போன்ற பகுதிகளில் உள்ள அடையாறு ஆற்றில் மழைநீர் சீராக செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து செங்கல்பட்டு நீர்வள ஆதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூடுவாஞ்சேரி, நந்திவரம், மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க பல்வேறு இடங்களில் வருவாய் ஆவணங்களில் உள்ளதுபோல் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நந்திவரம் முதல் ஊரப்பாக்கம் வரையும், ஊரப்பாக்கம் முதல் மண்ணிவாக்கம் வரையும், கூடுவாஞ்சேரி முதல் மண்ணிவாக்கம் வரையும், மண்ணிவாக்கம் முதல் வண்டலூர் வாலாஜாபாத் சாலை வரையும் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவு பெறும். இதன் மூலம் வரும் பருவமழை காலத்தில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காத வண்ணம் இந்த கால்வாய் மூலம் வெள்ளம் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT