வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகேயுள்ள தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 4,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பாலாற்றுப்படுகையின் இரு கரையோரங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், காஞ்சி மற்றும் செங்கை மாவட்ட நிர்வாகங்கள், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பாலாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், பழையசீவரம், வல்லிபுரம் மற்றும் வாயலூர் தடுப்பணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
பழையசீவரம் தடுப்பணையில் இருந்து விநாடிக்கு 3,500 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, வல்லிபுரம் தடுப்பணையில் 450 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் பாலாற்றின் முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேறி, கடலில் கலந்து வருகிறது.
இந்நிலையில், கரையோரங்களில் உள்ள கிராம மக்கள், பாலாற்றுப் படுகையில் ஆங்காங்கே குளிக்கின்றனர். இதேபோல, சிறுவர்கள் ஆர்வம் மிகுதியில் தடுப்பணை மற்றும் பாலாற்றுப்படுகையில் குளிக்கின்றனர்.
ஆற்றுப்படுகையில் அபாயமான பள்ளங்கள் உள்ளதால், உயிரிழப்பு நேரிடும் சூழல் உள்ளது. எனவே, ஆறு மற்றும் ஆற்றுப்படுகையில் தேங்கியுள்ள தண்ணீரில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.