புவிசார் குறியீடு பெற்ற சிற்பங்களை வடிவமைக்கும் சிற்பி. 
தமிழகம்

கள்ளக்குறிச்சி மரச் சிற்பத்துக்கு புவிசார் குறியீடு; சிற்பங்களுக்கான மரங்கள் கட்டுப்பாடின்றி கிடைக்குமா?- கைவினைஞர்கள் எதிர்பார்ப்பு

எஸ்.நீலவண்ணன்

கள்ளக்குறிச்சி மரச் சிற்பத்துக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்பங்களுக்கான மரங் கள் கட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் விரும் புகின்றனர்.

கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் தயாரிப் போர் கைவினைத் தொழிலாளர் தொழிற் கூட்டுறவு சங்கம் மற்றும் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் விருக்ஷா மரச் சிற்ப கைவினை தொழில் கூட்டமைப்பு ஆகியோர் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவுத்துறை அலுவலகத்தில் கடந்த 5.7.2013 அன்று புவிசார் குறியீடு வழங்கிட வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது.

இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தமிழக அரசு அதற்கான ஆய்வுகள் முடிந்து, கடந்த மாதம்14-ம்தேதி கள்ளக்குறிச்சி மரச்சிற் பத்துக்கு புவிசார் குறியீடு வழங்கி யது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சியில் அண்ணா நகர் பகுதியில் பாரம்பரி யமாக மரச் சிற்ப தொழில் செய்துவரும் சிற்பி நடராஜனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: சிலை களை வடிவமைக்க சிலை வாகை, மாவலிங்கம், அத்தி, இலுப்பை, காட்டு வாகை மரங்களையே பயன் படுத்துகிறோம். 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இப்பகுதியில் இத்தொழிலை செய்து வருகிறோம். ஆர்டரின் பேரிலே சிலைகளை செய்து தருகிறோம். அரசு நிறுவன மான பூம்புகார் நிறுவனத்தில் 20 சதவீத கமிஷனில் விற்பனைக்கு வைக்கிறோம். இங்கு ராஜகணபதி, விழிகளை மூடிய புத்தர், கீதை உபதேச பேனல், திருப்பதி பாலாஜி, வீணை சரஸ்வதி என பல்வேறு சிற்பங்களைச் செய்கிறோம். அன்னை தெரசா, அரசியல் தலைவர்கள் என வாடிக்கையாளர்கள் விரும்பு வதையும் வடித்து தருகிறோம்.

முதன்முதலில் சிற்ப வேலைக்கு வருபவர்களுக்கு விநாயகர் சிலையை செதுக்க கற்று கொடுப்போம். பின்னரே மற்ற சிலைகளை செதுக்க வர முடியும். கல்வராயன் மலைக்கு வருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இங்கு வந்து தங்களுக்கு தேவையான சிற்பங்களுக்கு ஆர்டரும் தருகின்றனர். பெரிய அளவில் தொழிற்சாலை இல்லாத இப்பகுதியில் சிலை வடிவமைப்பே எங்களின் தொழிலாக உள்ளது.

வெள்ளை அருக்குமரத்தில் விநாயகரும், வேப்ப மரத்தில் மாரியம் மனும், வேங்கை மரத்தில் முருகன் மரச்சிலையும் செய்து கொடுக்கிறோம். நாங்கள் வடிவமைக்கும் அனைத்து சிலைகளுக்கு, தேவையான மரங்களில் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வருகிறோம். சிற்பம் வடிப்பதற்கான மரம் என்ற அங்கீகாரத்தை நாங்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் எவ்வித கட்டுப்பாடுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வர மத்திய அரசு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதி பெறுவதைவிட இது சுலபமானது. இதை தற்போதைய ஆட்சியாளர்கள் எங்களுக்கு செய்து தர வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும் பேசிய சிற்பி நடராஜன், “அனைத்து மரங்களிலும் சிலைகளை செய்யும் நாங்கள் ‘ஆகாத மரத்தில்’ சிலைகளை செய்வதில்லை” என்றார். அவர் குறிப்பிடும் மரத்தில்தான் ஏவல் பொம்மைகள் செய்வார்களாம். கேரளாவில் சிற்சில இடங்களில் இந்த பொம்மைகளை கொண்டே ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றை செய்வார்கள்.

மனிதர்களுக்கு தீங்கு தரும் என நம்பக்கூடிய அந்த ஆகாத மரத்தில் நாங்கள் சிற்பங்கள் வடிப்பதில்லை என்று தெரிவித்தார்.

“எங்களுக்கான மரக்கட்டுப் பாட்டை தளர்த்த மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண் டும். இதன்மூலம் இக்கலை நீண்ட காலம் நீடித்து நிற்கும்” என்கின்றனர் இத்தொழிலில் ஈடுபடும் சிற்பக் கலைஞர்கள்.

SCROLL FOR NEXT