சோலார் பேனல் மோசடி வழக்கை கேரள மாநில அரசு விசாரிக்காமல் பொதுவான 3-வது அமைப்பு மூலமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கேரள உயர் நீதிமன்றத்தில் 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக சரிதா எஸ்.நாயர் தெரிவித்தார்.
கோவை வடவள்ளியில் சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை நிறுவனத் தின் இயக்குநர்களான சரிதா எஸ்.நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் நாயர், ஆர்.சி.ரவி ஆகியோர் காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி சுமார் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக, கடந்த 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது மூவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்கு கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணைக்காக சரிதா எஸ்.நாயர் நேற்று ஆஜரானார். விசா ரணைக்குப் பின்னர் அடுத்த கட்ட விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஒத்திவைத்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜராகாததால் குற்றம் சாட்டப்பட்டவரில் ஒருவரான ரவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சரிதா எஸ்.நாயர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சோலார் பேனல் மோசடி வழக்கில் முதல்வர் உம்மன் சாண்டிக்கு தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் விசா ரணைக் கமிஷன் முன்பாக அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல், 2 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளது.
அந்த வழக்கின் விசாரணை 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தும் விசாரணை கமிஷன், கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், உண்மையான நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
எனவே, இந்த வழக்கை நியாயமாக விரைந்து முடிக்க 3-வது புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி கேரள உயர் நீதிமன்றத்தில் 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய உள்ளேன். 3-வது அமைப்பு அமைக்கப்படும் பட்சத்தில் முதல்வர் உம்மன் சாண்டி மீதான ஆதாரங்கள் அனைத்தையும் ஒப்படைப்பேன் என்றார்.