நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கு வேலை, கல்வி வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதன் அருகிலே இடம் கொடுப்பது குறித்து அரசு ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட சென்னை மாவட்ட குழு செயலாளர் டி.கே.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், “அம்பத்தூர் வட்டம், மேனாம்பேடு, கொரட்டூர் கிராமங் களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து பட்டா வழங்க சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விட வேண்டும்” என்று கோரி யுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு இம்மனுவை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் பட்டா கோரியுள்ள பகுதி நீர் நிலைகள் உள்ள இடமாகும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்யக்கூடாது என்றும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடு கையில், “ஆக்கிரமிப்பு செய்தவர்களை அப்புறப்படுத்தும்போது அந்த மக்களை நீண்ட தொலைவில் குடியமர்த்தக்கூடாது என உத்தரவிடக் கோரினார்”. இது அரசின் கொள்கை முடிவாகும். பொது வாக ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி ஏற்கெனவே குடியிருந்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றி நீண்ட தொலைவில் குடியமர்த்துவது சாத்தியமாகாது.
ஏனென்றால், குடியமர்த்தப் பட்ட பகுதியில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை விற்று விட்டு, முன்பு இருந்த பகுதிக்கே சென்றுவிடுவது குறித்து விவாதிக் கப்பட்டுள்ளது. வேலை செய்த இடம், கல்வி வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்கள் பழைய இடத்துக்கே திரும்பி விடுகின்றனர். எனவே, குடியிருந்த பகுதிக்கு அருகிலேயே அவர் களை குடியமர்த்துவது நல்ல தீர்வாக இருக்கும். ஆனால், அது ஆங்காங்கே இடம் இருப்பதை பொருத்து அமையும். எனவே, இதுகுறித்து அரசு ஆராய வேண் டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.