தமிழகம்

காங்கிரஸ் மகளிரணி அகில இந்திய பொதுச்செயலாளராக விஜயதரணி நியமனம்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் மகளிரணி அகில இந்திய பொதுச்செயலாளராக எஸ்.விஜயதரணி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி இன்று வெளியிட்ட செய்தியில், ''காங்கிரஸ் துணைத் தலைவரும், மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் மகளிர் காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளராக விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார்'' என தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றவர் எஸ்.விஜயதரணி. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொறடாவாக செயல்பட்டு வந்த அவர், கடந்த 2015 ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் 27-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், விஜயதரணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இளங்கோவன் தன்னை அநாகரிகமான வார்த்தைகளில் விமர்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாந்தாஸ்ரீனி இளங்கோவன் மீது பெண் கொடுமைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தார்.

இது தொடர்பாக இரு தரப்பினரும் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்திய காங்கிரஸ் மேலிடம், கடந்த ஜனவரி 22-ம் தேதி மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விஜயதரணியை நீக்கியது. புதிய தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ.வான ஏ.எஸ். பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அதிமுக, பாஜகவில் சேர விஜயதரணி முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியது. இதனை மறுத்த அவர், சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து தனது நிலையை விளக்கினார். இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT