கன்னியாகுமரி மாவட்ட மழை சேதங்களை பார்வையிட்ட அமைச்சர் குழுவினர் மழையால் பாதித்தோருக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நின்ற பின்பும் இயல்புநிலை திரும்பாமல் பாதிப்பு தொடர்கிறது. மழைக்கு உயிரிழப்பு 4 பேராக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை இன்று அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழக வருவாய், மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சாரம், மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதிநிர்மலாசாமி ஆகியோர் தோவாளை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டு சேதமான நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மழையால் மூழ்கி அழுகிய நெற்பயிர்களையும், அவை தண்ணீரில் முழைத்திருப்பதையும் எடுத்து விவசாயிகள் கண்ணீர்மல்க அமைச்சர்களிடம் காட்டினர்.
அதன் பின்னர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாஞ்சில் கூட்டரங்கில் குமரி மழைவெள்ள பாதிப்பு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் 3 அமைச்சர்களும் கலந்தாய்வு செய்தனர்.
ஆய்விற்கு பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; ”கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மழை வெகுவாக குறைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிநின்ற தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து மழைவரும் என்ற எச்சரிக்கை உணர்வோடு இருப்பதுடன், இனிவரும் காலங்களில் அதிக மழை பொழியும்போது தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வராமல் தடுப்பதற்கு உரிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும். இதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்தமுறை மழை பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு ரூ.33 கோடி, நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.27 கோடி, மின்சாரத்துறைக்கு ரூ.152 கோடி என மொத்தம் ரூ.212 கோடி திட்ட மதிப்பீடு மாவட்ட ஆட்சியர் மூலம் தயார் செய்யப்பட்டு. அந்தந்த துறை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதல் வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சரின் ஒப்புதலுக்காக மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளுக்கும் இதேபோன்று நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனடியாக அதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
குமரியில் கனமழையால் 101 மின்மாற்றிகள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் நேரடியாக வந்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து 206 மின்மாற்றிகளுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. துரிதமாக மின்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 45 மின்மாற்றிகள் வெள்ளநீர் வடியாமல் இருப்பதால் சரிசெய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 3661 வீட்டு மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இதில் 2922 வீட்டு மின்இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 739 மின்இணைப்புகளும் தேங்கிய தண்ணீர் வடிந்ததும் கொடுக்கப்படும்.
மாவட்டத்தில் 35 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 120 ஏக்கர் வாழை மரம், 4.5 ஏக்கர் மரவள்ளிக்கிழங்கு தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். குமரியில் தண்ணீர் தேங்கி தாழ்வான பகுதியில் இருந்த சுமார் 337 பொதுமக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலமாதங்கள் கழித்து நிவாரணம் வழங்குவதால் எந்தவொரு பலனும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.