தமிழகம்

கரோனா மூன்றாவது அலை வருவதிலிருந்து தப்பித்ததற்குக் காரணம்? - புதுவை ஆளுநர் தமிழிசை பேட்டி

செ. ஞானபிரகாஷ்

இன்னும் 2 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்திவிட்டால் புதுவை 100% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாறும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''உலகம் முழுவதும் நடந்த ஆய்வில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுமார் 95 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிருக்கு ஆபத்து இல்லை.

கரோனா பெருந்தொற்று அவசரகால நோயாக மட்டுமில்லாமல் எப்போதும் இருக்கும் நோயாக மாறக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தொற்றிக்கொள்ளும். இந்தச் சூழ்நிலையில் கரோனா தடுப்பூசி மிக மிக அவசியம். புதுச்சேரியில் மீதமுள்ள இரண்டு லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டால் புதுச்சேரி 100% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாறும்.

தீபாவளிக்கு முன்பு தடுப்பூசி போட்டுக்கொண்டால் பயமில்லாமல் திருவிழாவைக் கொண்டாடலாம். கரோனா மூன்றாவது அலை வருவதிலிருந்து நாம் தப்பித்ததற்குக் காரணம் தடுப்பூசி செலுத்தப்பட்டதுதான்''.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT