இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

பெட்ரோல் - டீசல் - கேஸ் விலை உயர்வுக்குக் கண்டனம்; அக்.30-ம் தேதி சைக்கிள் ஊர்வலம்: இந்தியக் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பெட்ரோல் - டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து வரும் 30-ம் தேதி சைக்கிள் ஊர்வலம் நடத்தப்படும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் 2021 அக்டோபர் 17, 18 தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) ஈரோட்டில் உள்ள மாவட்டக் கட்சி அலுவலகத்தில் கே.ஆர்.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் கே. சுப்பராயன் எம்.பி., தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் கோ.பழனிசாமி, பி.பத்மாவதி, டி.எம்.மூர்த்தி, ந. நஞ்சப்பன், நா. பெரியசாமி, க.சந்தானம், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் எம்.பி., தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் வை.சிவபுண்ணியம், எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

"நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும்

சிறப்பு நிலை பேரூராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்தல் நடத்த வேண்டும். இதற்குப் பொருத்தமான சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசையும், முதல்வரையும் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நீட் தேர்வு ரத்து: தமிழ்நாடு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குக

தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்பி, ஒப்புதல் பெற வலியுறுத்துகிறோம். பன்னிரண்டு மாநிலங்களின் முதல்வர்களுக்கு நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் கரம் கோக்குமாறு ஆதரவு திரட்டி வருவதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வரவேற்பதுடன், இது தொடர்பாகப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி மத்திய அரசுக்கு நேரடி அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் நிறைவேற்றுக

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் ஒன்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசைக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஆசிரியர் வாரியத் தேர்வு வயது வரம்பை நீக்குக

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை முற்றிலுமாக நீக்க வேண்டும் எனத் தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது.

பெட்ரோல் - டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் ஊர்வலம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றன. பொதுமக்களின் செலவுச் சுமையைக் கூட்டி வரும் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையைக் கண்டித்தும், மத்திய அரசு சுங்க, கலால் வரிகளைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி 30.10.2021 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சைக்கிள் ஊர்வலம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கட்சி மாநில மாநாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாட்டைத் திருப்பூர் மாநகரில் 2022, ஆகஸ்ட் 3, 4, 5, 6 தேதிகளில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் முன் தயாரிப்பாக 26.10.2021 முதல் கட்சி கிளை மாநாடுகள், இடைக்குழு மாநாடுகள் மாவட்ட மாநாடுகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது".

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT