மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.19 கோடியே 5லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம், மீன்வளத் துறை கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
நாட்டு கோழிக்குஞ்சு உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமங்களில் இத்தொழிலை ஊக்குவித்து தொழில் முனைவோரை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் ஓசூரில்உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.6 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் குஞ்சுபொரிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதைசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
இந்த வளாகத்தில் 5,100 வளரும்கோழிகள், 9,150 முட்டையிடும் கோழிகளைப் பராமரிக்க முடியும்.வாரத்துக்கு 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 10 லட்சம் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் நபார்டு திட்ட நிதியில் ரூ.8 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலைய கட்டிடத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். மீன்வளர்ப்பு தொழில் நிறுவனத்துக்கு தேவையான 2-ம் நிலை தொழில்நுட்ப உதவியாளர்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
மேலும், திருச்சி ஜீயபுரத்தில் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய கட்டிடத்தையும் முதல்வர் திறந்துவைத்தார். விலைஉயர்ந்த நன்னீர் அலங்கார மீன்களை வளர்ப்பவர்களுக்கு சிறந்த தரமான சினை மீன்களை உற்பத்தி செய்வது இம்மையத்தின் நோக்க மாகும்.
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் 2020-21-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத்தொகையாக ரூ.1 கோடிக்கான காசோலை,2020-21-ம் ஆண்டுக்கான பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ.23 லட்சத்து 40 ஆயிரத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை செயலர் தெ.சு.ஜவஹர், மீனவர் நலத் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் அ.ஞானசேகரன், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை. துணைவேந்தர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.