தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாளில் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தாங்கள்தேர்தலில் செலவிட்ட தொகைக்கான கணக்கை உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின் நகலை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சி செயலரிடமும், ஊராட்சிஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி ஆணையரிடமும், கிராம ஊராட்சித் தலைவர்,கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சிஅலுவலரிடமும் தாக்கல் செய்யவேண்டும். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தாக்கல் செய்ய வேண்டும்.

செலவு கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டு, வருங்காலங்களில்3 ஆண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆக்கப்படுவார்.

SCROLL FOR NEXT