மேல்மருவத்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள்கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி பொன்னி மேற்பார்வையில், கூடுதல் எஸ்பிராஜாராம் தலைமையில் காவல்ஆய்வாளர் இந்திரா, உதவி காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், பாலச்சந்தர் மற்றும் போலீஸார், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் பழமையான மீனாட்சி அம்மனின் ஐம்பொன் சிலை இருந்ததைக் கண்டு, பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அவரிடம் நடத்தியவிசாரணையில், அவர் சென்னையைச் சேர்ந்த கார்த்திக்(29) என்பதும், சென்னையைச் சேர்ந்த மூர்த்தி(33), சித்தாமூரைச் சேர்ந்தகுமரன்(30), அசோக்(33), அறிவரசு(43), திருத்துறைப்பூண்டி சுந்தரமூர்த்தி(25), வேலூர் அப்துல் ரகுமான்(24) ஆகியோருடன் சேர்ந்து,அந்தச் சிலையை ரூ.1 கோடிக்கு விற்க திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் அளித்த தகவலின்பேரில் மற்ற 6 பேரையும் பிடித்த போலீஸார், பொய்கை ஆற்றில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான ரிஷப தேவர் ஐம்பொன் சிலை ஒன்றையும் மீட்டனர்.
தொடர்ந்து, 7 பேரையும் கைதுசெய்து, கும்பகோணத்தில் உள்ளகூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில்நேற்று முன்தினம் இரவு ஆஜர்படுத்தினர். மேலும், கைப்பற்றப்பட்ட 2 சிலைகளையும் ஒப்படைத்தனர்.
அந்தச் சிலைகளை கும்பகோணம் ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கவும், கைது செய்யப்பட்டவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, 7 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்த போலீஸார், 2 ஐம்பொன் சிலைகளையும் சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.