தமிழகம்

காப்பீடுகள் தொடர்பாக ஆன்லைனில் புகார் அளிக்க புதிய வசதி

ப.முரளிதரன்

காப்பீடு தொடர்பான புகார்களை ஆன்லைன் மூலம் அளிக்கும் புதியசேவையை காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

உடல்நிலை பாதிக்கப்படும்போதோ, விபத்து ஏற்படும்போதோ ஏற்படும் அவசர சிகிச்சைக்கான செலவை சமாளிக்க பொதுமக்கள் பாலிசிகளை வாங்குகின்றனர். ஆனால் சில நேரங்களில் அவர்கள் எடுத்த பாலிசிகளில் இருந்துமுழு தொகையையும் சிகிச்சைக்காக காப்பீடு நிறுவனங்கள் அளிப்பதில்லை. அல்லது ஏதாவது ஒரு காரணம் கூறி அவற்றை நிராகரிக்கின்றன. இத்தகைய தருணங்களில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் மீது புகார் அளிக்க பாலிசிதாரர்கள் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், பாலிசிதாரர்களின் வசதிக்காக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம், ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் சேவையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து, பொதுத்துறை காப்பீடு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

காப்பீடு சேவையில் குறைபாடுஏற்பட்டு, அதுதொடர்பாக காப்பீடுதாரர்கள் அளிக்கும் புகார்களுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக, காப்பீடு தீர்ப்பாய விதிமுறைகள் 2017-ல் மத்திய அரசு திருத்தங்கள் செய்துள்ளது. இதன்படி, காப்பீடுநிறுவனங்கள், பாலிசிதாரர்களின் புகார்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) நுகர்வோர் விவகாரத் துறையின் குறைதீர்க்கும் பிரிவில் புகார் அளிக்கலாம்.

இதற்காக ஒருங்கிணைந்த குறைதீர்க்கும் ஆன்லைன் போர்ட்டலை ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கி உள்ளது. https://www.policyholder.gov.in/Report.aspx என்ற இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யலாம். complaints@irdai.gov.in என்ற இ-மெயில் மூலமாகவும் புகார்தெரிவிக்கலாம். கடிதம் மூலம் புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் https://www.policyholder.gov.in/uploads/CE-Documents/complaintform.pdf என்ற படிவத்தைபதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். 155255 அல்லது 1800-425-473ஆகிய கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் புகார் கூறலாம்.

இதன்மூலம், புகாரின் நிலையைஆன்லைனிலேயே கண்காணிக்கலாம். குறைதீர்ப்பாளர் (ஆம்புட்ஸ்மேன்) காணொலி மூலம் விசாரணை நடத்துவார். இந்த புதிய வசதிமூலம், அலைச்சலின்றி புகார்அளிக்க முடியும். விரைவாகவும் தீர்வு கிடைக்கும்.

SCROLL FOR NEXT