தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் பல்வேறு இடங்களில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே மாங்கரையில் அரசு மதுக் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மறியல் நடந்தது. மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் தலைமை வகித்தார்.
இதில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்து அருகே உள்ள மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை எச்.ராஜா சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் மூலைக்கு மூலை செயற்கை கருத்தரிப்பு மையங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் அனைத்து மதுக் கடைகளையும் மூடவேண்டும். இல்லையென்றால் செயற்கை கருத்தரிப்பு தான் அதிகம் நடக்கும்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய், பழைய ஓய்வூதியத் திட்டம், நீட் தேர்வு ரத்து ஆகியவற்றை அமல்படுத்தவில்லை.
மத்திய அரசு இலவச தடுப்பூசி தருகிறது. ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ரேஷன் கடைகளில் தருகிறது. இது இல்லையென்றால் தமிழகத்தில் பட்டினிச் சாவு வந்துவிடும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.