இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய எடை குறைந்த காம்போசிட் சிலிண்டரை அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா வெளியிட, திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக் கொண்டார். உடன் (இடமிருந்து) இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன், தென்பிராந்திய நிர்வாக இயக்குநர் கே.சைலேந்திரா. 
தமிழகம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எடை குறைந்த நவீன சிலிண்டர் அறிமுகம்

செய்திப்பிரிவு

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எடை குறைந்த நவீன காம்போசிட் சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா வெளியிட, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக்கொண்டார்.

புதிய வகை காம்போசிட் சிலிண்டர் 5 கிலோ, 10 கிலோ ஆகிய எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது விநியோகம் செய்யப்படும் வழக்கமான இண்டேன் சிலிண்டரைவிட இது கூடுதல் வலுவானது, பாதுகாப்பானது.

இதன் உட்புறம் எச்டிபிஇ லைனிங் மற்றும் பாலிமர் சுற்றப்பட்ட ஃபைபர்கிளாஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதால் இதன் பாதுகாப்பு பன்மடங்கு கூடுகிறது. இது வழக்கமான சிலிண்டரின் எடையில் பாதி மட்டுமே உள்ளதால் கையாள்வது எளிது. எரிவாயு எந்த அளவுக்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் துருப்பிடிக்காது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சிலிண்டர்களை கொடுத்து இந்த புதிய சிலிண்டரை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் விலை செலுத்த வேண்டும். பழைய சிலிண்டரை மாற்ற விரும்பாதவர்கள் செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ.2,150 செலுத்தி 5 கிலோ சிலிண்டரும், ரூ.3,350 செலுத்தி 10 கிலோ சிலிண்டரும் பெற்றுக் கொள்ளலாம்.

வழக்கம்போல, புக்கிங் செய்தால் இந்த புதிய வகை சிலிண்டரும் வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT