ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நவீன்குமார்(21). இவர், பூந்தமல்லி அருகே தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, தாம் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். அப்போது, அவர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பிறகு, நவீன்குமார் தன் அறைக்குச் செல்ல முயன்றபோது, அறையின் சாவி மற்றொரு நண்பரிடம் இருப்பது தெரிய வந்தது. ஆகவே, 8-வது மாடியில் உள்ள பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த அறையின் பின்பக்கம் உள்ள பைப் வழியாக தன் அறைக்கு செல்ல முயன்றுள்ளார். மதுபோதையில் இருந்ததால், நிலைதடுமாறி 8-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில், படுகாயமடைந்த நவீன்குமாரை, தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது நவீன்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
நசரத்பேட்டை போலீஸார், நவீன்குமார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக, அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.