அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்ததால் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முதல்வர் எம்ஜிஆர், அதிமுக கட்சியைத் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 50-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி, அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, நேற்று (அக்.16) ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் இன்று சென்னை, தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு சசிகலா சென்றார். அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கு அதிமுக கொடியை சசிகலா ஏற்ற உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்த கல்வெட்டில், கொடியேற்றியவர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டிருந்ததால் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அங்கு குழுமி இருந்தனர்.
அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளிக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்துகிறார். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் சசிகலா வழங்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.