தமிழகத்தில் 9 மாவட்ட ஊரகஉள்ளாட்சித் தேர்தல் மற்றும் இதர மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை யொட்டி அமலில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப்.13-ம் தேதி அறிவித்தது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
அதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கு மேலான ரொக்கத்தை உரியஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் பயன்பெறும் வகையிலான அறிவிப்புகளை அரசு வெளியிடக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
பின்னர் கடந்த அக்.6 மற்றும் 9-ல் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல், வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், நேற்று காலை 10 மணியுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவித்துள்ளார்.