அதிமுக பொன்விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், வெள்ளி விழாவை ஒப்பிட்டு அக்கட்சியின் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியிட்டுள்ள பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு இன்று முதல் கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியில் நடைபெறும் பெரிய அளவிலான நிகழ்ச்சி இது. இந்நிலையில் இதுபற்றி அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அதிமுகவுக்கு பொன்விழா ஆண்டு தொடங்குகிறது. இதற்குமுன்பு 1997-ல் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, 1998 ஜனவரி 1,2,3-ம் தேதிகளில் திருநெல்வேலியில் ஜெயலலிதா தலைமையில் வெள்ளி விழா மாநாடு நடந்தது. அப்போது நான்பாஜக மாநில துணைத் தலைவர்.
மாநாட்டின் 3-ம் நாளில் பாஜகதேசியத் தலைவர் எல்.கே.அத்வானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் அவரோடு கே.என்.லட்சுமணன், இல.கணேசன் ஆகியோருடன் நானும் வந்தேன். விழா மேடையில் முதல் வரிசையில் தலைவர்களோடு அமரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
மாநாட்டில் அத்வானி பேசும்போது, திராவிட இயக்க வரலாற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி எடுத்துக் கூறினார். அவர், ‘‘திராவிடர் கழகத்தில் இருந்து திமுக பிறந்தது. திமுகவில் இருந்து அதிமுக உருவானது. மறைந்த எம்ஜிஆர் அதிமுகவின் முன் ‘அஇ’ என்ற 2 எழுத்துகளை சேர்த்து கட்சிக்கு தேசிய முக்கியத்துவம் அளித்தார்’’ என்றார்.
அந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணியின் வெள்ளோட்டமாக அந்த மாநாடு அமைந்தது. கடந்த 1998 மக்களவை தேர்தலை ஜெயலலிதா தலைமையில் சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை வென்று வரலாறு படைத்தது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் அதிமுக சார்பில் 4 பேர்அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
வெள்ளி விழா வெற்றி வரலாறு படைத்தது. பொன்விழா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த 2017-ல் அணிகள் பிரிந்தபோது, ஓபிஎஸ் அணியில் இருந்தார் மைத்ரேயன். இரு அணிகளும் இணைந்த நிலையில், தொண்டர்கள் மனநிலை குறித்து அவர் கருத்து தெரிவித்தது பரபரப்பானது. இதுபோன்று, பல சூழல்களில் அதிமுக நிலவரம் குறித்து தனது கருத்துகளை அவர் வெளியிட்டு வருகிறார். தற்போது, சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ள நிலையில், மைத்ரேயன் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.