புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.
தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் பக்தர்களை கோயிலுக்கு அனுமதித்து வந்தனர்.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை கோயிலுக்கு வந்து பெருமாள் பக்தர்கள் வழிபாடு நடத்துவர். வார இறுதி நாட்களில் இருந்த தடை காரணமாக அவர்களால் சனிக்கிழமை கோயிலுக்குள் வர முடியவில்லை. வெளியில் இருந்தபடியே வழிபாடு நடத்திவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வாரத்தில் ஏழு நாட்களிலும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோயில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கினர்.
அத்திவரதர் மூலம் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதிக அளவு பக்தர்கள் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதையும் பக்தர்கள் பார்த்தனர்.