தமிழகத்தில் மழைக்காலம் தீவிரமடைந்தள்ளதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு இதுவரை 3,187 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவமனைகளில் 351 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளில் இருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதனால், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வெள்ளி, சணி, ஞாயிற்றுக்கிழகை உள்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து வகை கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடர்கிறது.
இந்நிலையில் கரோனா குறைந்த நிலையில் தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
மதுரையில் நேற்று ஒரே நாளில் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் இதுவரை மதுரை மாவட்டத்தில் 14 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலேயே முழு கவனத்தையும் செலுத்தியதால் மழைக்கால நோய்த் தடுப்பு பணிகளில் அவர்களால் போதிய தடுப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் மேற்கொள்ளாமல் விட்டுவிட்டனர். அதனால், டெங்கு காய்ச்சல் சத்தமில்லாமல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 2012, 2013, 2015, 2017 ஆம் ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. குறிப்பாக மதுரையில் மேலூர் உள்ளிட்ட சில பகுதியில் டெங்கு பாதிப்பு பெருமளவில் காணப்பட்டது. அதன்பின் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த மழை சீசனில் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். நடப்பு ஆண்டு ஜனவரி முதல் இப்பாது வரை 3,187 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 351 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
2012, 2017 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது டெங்கு காய்ச்சல் தாக்கம் தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது. வீடு, அலுவலகங்களில் மழை தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை காணப்படும். அதனால், இந்த நோயைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு கொசு, நல்ல தண்ணீரில் வளரக்கூடியது. இந்தக் கொசு 500 மீட்டர் அளவில்தான் பறக்கும். அதனால், இந்த நோயைக் கட்டுப்படுத்துவது மிக எளிது. மக்கள் விழிப்புடன் இருந்தால் டெங்கு பாதிப்பை முழுமையாக தடுத்துவிடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.