தமிழகம்

தமிழகத்தில் இதுவரை 5.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை செயலர் பேட்டி

இ.மணிகண்டன்

தமிழகத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் மூலம் 5.30 கோடி பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகரில் ரூ.380 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் "மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு அதிக இடங்கள் பெற தமிழக முதல்வர் துரித முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் வேண்டும் எனக் கோரியதில் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளும் மத்திய அரசு நிதி ரூ.2,145 கோடியும், மாநில அரசு நிதி ரூ.1,850.23 கோடியும் என மொத்தம் ரூ.3,995.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இதில், 3 கல்லூரிகளுக்கு 150 இடங்கள், 4 கல்லூரிகளுக்கு 100 இடங்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அரியலூர், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முடிவு வந்தபின் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்தோருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கும். விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும். கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடம் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேசிய மருத்துவக் குழுமம் விரைந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் விரைவில் டிராமாகேர் வசதி விரைவில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா நோய்த் தொற்று வீதம் குறைந்துள்ளது. 1 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்குவதால் பள்ளிக் கல்வித்துறையுடன் சுகாதாரத்துறை இணைந்து செயல்பட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தும். கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நோய்த் தொற்று குறைந்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை அரசு மூலம் 5.4 கோடி பேருக்கும், அரசு மற்றும் தனியார் மூலம் 5.30 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 67 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வயதானவர்களில் 50% பேர் இன்னமும் முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்குச் சென்று முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், டீன் சங்குமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT