தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிப்போரை மறு குடியமர்த்துவதற்கான வரைவுக் கொள்கையில், மறுவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்துள்ளதால், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளின் கரைகள், நீர்நிலைகள் போன்ற பல்வேறு பகுதிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள சூழலில், பேரிடர் காலங்களிலும், அரசுக்கு நிலம் தேவைப்படும் நிலையிலும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதைத்தவிர்க்கும் வகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது, அங்கு குடியிருப்போருக்கு உரிய மாற்று இடம், வீடு தரப்பட வேண்டியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இதுபோன்றஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தும் திட்டங்களை வருவாய்த் துறை 2 பிரிவுகளாகச் செயல்படுத்துகிறது. ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு அதே நிலத்தில், வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல், ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து குடியிருப்போரைக் கண்டறிந்து அவர்களுக்கு அதற்குப் பதிலாக வேறு அரசு நிலம் அல்லது தனியார் நிலத்தை பெற்று அதில் மறு குடியமர்த்தம் செய்துஅவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
இதில், ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பைப் பொறுத்தவரை, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கியநகரங்களில் அதிகளவில் கண்டறியப்பட்டு, அங்கு குடியிருப்போரை மறு குடியமர்த்தும்பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் (குடிசை மாற்று வாரியம்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மறு குடியமர்த்தினால் மட்டும் போதாது, அவர்களுக்கான அடிப்படை வசதிகள், மறுவாழ்வுக்கான தேவைகளையும் ஒருங்கமைத்துத் தரவேண்டும் என்பதில் வாரி்யம்முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே தற்போது ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மறு குடியமர்த்தம் மற்றும் மறுவாழ்வுக்கான வரைவு திட்டம் ஒன்றை முதல்முறையாக வெளியிட்டு பொதுமக்களின் கருத்தைக் கேட்டுள்ளது.
அந்த வரைவுத் திட்டத்தில், முக்கியமாக ஆட்சேபகரமான புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களை மறு குடியமர்த்தம் செய்யும்போது, தேர்வு செய்யப்படும் நிலம் எப்படி இருக்க வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் வசித்த நகரத்துக்கு மிகவும் அருகில் அதாவது 30 நிமிடங்களில் சென்று வரும் வகையில் இருக்க வேண்டும். ரயில், பேருந்து போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அந்தப் பகுதியில் இருந்து நகரத்துக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். வனத்துறை சார்ந்த நிலமாக இருக்கக் கூடாது.
மறு குடியமர்த்தலுக்காக ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும்போது, அவர்களுக்கு உரிய போக்குவரத்துச் செலவு, மாதாந்திர உதவித்தொகை அளிக்க வேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையை 30 நாட்கள் வழங்க வேண்டும்.
சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள்,திறன் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், வேலைவாய்ப்பு அனைத்து நலத்திட்டங்களும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2ஆண்டுகளுக்குள் சென்றுசேர வேண்டும் என்றும் வரைவு கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மக்களின் கருத்துகளைக் கேட்டு, தனியான மறு குடியமர்த்தல் கொள்கை வெளியிடப்பட்டு, அதன்படி திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னையில் தற்போதுள்ள திட்டம்குறித்து, குடிசைமாற்று வாரிய அதிகாரிகள்கூறும்போது, ‘‘கூவம் மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் அதிகளவில் பொதுமக்கள் பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீட்டில் உள்ளபொருட்களை எடுத்துச்செல்ல போக்குவரத்துச் செலவாக ரூ.5 ஆயிரம், மாதாந்திர பராமரிப்புச் செலவாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. மேலும், போக்குவரத்து, குடிநீர் வசதி, மின்சாரத்துக்கான ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அங்கேயே கடைவைப்பதற்கான வசதி, திறன் பயிற்சி உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
அதேநேரம், தற்போது ஒரே இடத்தில்அனைவரையும் பெரிய குடியிருப்புகளைக்கட்டி வீடு தருவதை விட, மக்கள் நெருக்கடியை குறைக்கும் வகையில் பல இடங்களில் குடியிருப்புகளை அமைக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது. இதை செயல்படுத்தவே தற்போது வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
மறு குடியமர்த்தலில் பொதுமக்களுக்கு முதலில் சிரமங்கள் இருந்தாலும், காலப்போக்கில், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட வசதிகள், பாதுகாப்பான சூழலும் அரசால் ஏற்படுத்தப்படுவதால், அவர்கள் வாழ்வாதாரமும் மேம்படுகிறது. அதேநேரம், நகரப்பகுதிகளும் விரிவடைகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆக.27 நிலவரப்படி, ஆட்சேபகரமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ள 1,77,923 குடியிருப்புகள் கண்டறியப்பட்டு, அவர்களை மறு குடியமர்த்தம் செய்வதற்கான, அரசு புறம்போக்கு நிலம் அல்லது தனியார் பட்டா நிலம் கண்டறியப்பட்டு வருகிறது. இதற்காகவே வரன்முறைப்படுத்தும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.