பட்டாசு தொழிலை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அப்பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை இல்லை. தமிழகத்திலேயே வறண்ட பகுதியான, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, இந்தியாவின் குட்டி ஜப்பான் என பெயரெடுத்து, பட்டாசுத் தொழிலில் வளர்ச்சி பெற்ற நகரமாக விளங்குகிறது. வறட்சியான பகுதி என்பதால் விவசாயமின்றி, வேலைவாய்ப்பை இழந்து நின்ற அப்பகுதி மக்களுக்கு பட்டாசுத் தொழில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களைக் காட்டி கடந்த 5 ஆண்டுகளாக உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகளால் பட்டாசு தொழிலும், தொழில்சார்ந்த மக்களும் அலைக்கழிக்கப்பட்டு வரும் நிலை கவலைக்குரியது. கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பட்டாசு தொழில் சீரழிந்துவிட்டது.
முதல்வருக்கு நன்றி
பட்டாசு தொழிலை நிரந்தரமாக மீட்டெடுக்க உரிய தீர்வுகளை அரசு காண வேண்டும்.குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அண்டை மாநிலங்களோடு புரிந்துணர்வை ஏற்படுத்தியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தற்போது மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.