22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஆட்கொல்லிப் புலி இன்று மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. அதை கூண்டில் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும் போது, அந்த புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்று 13 வயதுடையை இந்த T23 புலி. அந்தப் புலி மசினகுடியில் கெளரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு அடித்துக் கொன்றது. பின்னர், அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி, கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றது.
இதுதவிர, அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இதற்கிடையில், ஆட்கொல்லிப் புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த பசுவன் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றது.
அதனையடுத்து, புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது. அதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
அதனையடுத்து, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போராடினர்.
கும்கிகள், நாய்கள்:
தேடுதல் வேட்டையில் உதயன், சீனிவாசன் ஆகிய கும்கி யானைகள், அதவை, ராணா ஆகிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், அந்தப் புலி வனத்துறையினருக்கு போக்குக் காட்டி வந்தது.
நீண்ட தேடுதலுக்குப் பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஒம்பெட்டா வனப்பகுதியில் கண்டறியப்பட்டது. இதனால், கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். நேற்று (அக். 14) இரவு புலிக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கிச் சென்றது.
இந்நிலையில், மசினகுடி அருகே புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதனால், இன்று (அக். 15) புலியை வனத்துறையினர் பிடித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, இன்று மதியம் மாயார் வனத்தில் கூற்றுப்பாறை பகுதியில் நடமாடிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர்.
பிடிபட்டது எப்படி?
வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, "நேற்று இரவு டி 23 புலி, தெப்பக்காடு - மசனகுடி சாலையில் வருவதாகத் தகவல் வந்தது. உடனடியாக, மருத்துவக் குழு மற்றும் தேடுதல் குழு அந்த இடத்துக்குச் சென்று புலி கண்காணிக்கப்பட்டது.
புலி சாலை ஓரத்தில் வருவதும், மீண்டும் புதருக்குள் செல்வதுமாய் இருந்தது. இரவு முழுவதும் புலி அந்தச் சாலையில் கண்காணிக்கப்பட்டது. தற்போது புலி மசனகுடி பகுதி, கூல் பிரீஸ் ரிசார்ட் அருகிலிருக்கும் வனப்பகுதிக்கு வந்துள்ளதாகத் தெரிந்தது.
உடனடியாக, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து, இன்று யாரும் அந்தப் பகுதிக்கு மாடு மேய்க்கவோ மற்றும் வனத்துக்குள் செல்லவோ கூடாது என்று அறிவிப்பு செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டது. வனப் பணியாளர்களும் அந்தப் பகுதியில் யாரும் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மதியம் புலி மாயார் சாலையில் நடமாடுவதாக வந்த தகவலை அடுத்து, அங்கு வனத்துறையினர் சென்றனர். அப்போது அங்குள்ள புதரில் புலி சென்றது. இந்த புதரைச் சுற்றி வளைத்த வனத்துறையினர், புலி வெளியில் வரும் வரை காத்திருந்தனர்.
புதரை விட்டு வெளியே வந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. புலி மயக்கமடைந்ததும் அதை வலைகள் கொண்டு கட்டி, கூண்டில் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் புலிக்கு சிகிச்சை அளித்து சென்னை வண்டலூர் உயிரியியல் பூங்காவில் வைத்துப் பராமரிக்கப்படும்" என்றனர்.