ஈஸ்டர் திருநாளை ஒட்டி கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இயேசு பெருமானுக்குக் கொடியோர் இழைத்தவன் செயல்களால் நேர்ந்த துன்பங்கள் நீங்கி; இன்பம் மலர்ந்த நாளாக - இயேசு நாதர் இன்னல்களிலிருந்து மீண்டெழுந்த நாளாகக் கிறிஸ்தவ சமுதாய மக்கள் 27.3.2016 அன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடுகின்றனர். இதனையொட்டி தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த போதெல்லாம் கிறிஸ்தவ சமுதாயப் பெருமக்களைப் போற்றி, அவர்களின் நலம்பேணிட சலுகைகள் பல வழங்கி; என்றும் அவர்களுடன் நல்லுறவு வளர்த்து; கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு என்றும் துணைபுரிந்து வருவது திராவிட முன்னேற்றக் கழகமே.
இதனை நினைவுபடுத்தி இந்நன்னாளில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.