காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா கலாம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஏவுகணை நாயகன் கலாம்: டிடிவி தினகரன்
அப்துல் கலாம், 'சாதிக்க வேண்டும்' என்ற கனவும், 'உறுதியாக சாதிப்போம்' என்கிற நம்பிக்கையும், அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டரில், "எல்லோருக்கும் பிடித்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாம் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்கிடுவோம்!. உறுதியாக சாதிப்போம்' என்கிற நம்பிக்கையும், அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீராமனின் பாணத்திற்கு பிறகு காற்றை கிழித்தது கலாமின் ராக்கெட்டுகள்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் "நாட்டுப்பற்றுக்கு நல்ல பொருள் ஆனவரே தேசத்தை தெய்வமென்று தொழுதவரே சீறிப்பாயும் ஸ்ரீராமனின் பாணத்திற்கு பிறகு காற்றை கிழித்தது கலாமின் ராக்கெட்டுகள் தான் இந்தியாவின் எதிரிகளை அமைதிப்படுத்தின இணையத்தை இந்தியாவில் இமயப்படுத்தின பாரதத்தின் ரத்தினமே உன் பிறந்தநாள் இத்தினமே ஸலாம் ஐயா!" என்று பாராடிப் பதிவிட்டுள்ளார்.