மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதி களில் இரு கட்டங்களாக நடந்தன. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தலும் 9-ம் தேதி நடந்தது.
இரு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்ததாலும், ஒவ்வொருவரும் 4 வாக்குகளை செலுத்தி இருந்ததாலும் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட் டது. நேற்று முன்தினம் காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, நேற்று மாலை வரை நீடித்தது.
இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக பிடித்துள்ளது. 9 மாவட்டங்களிலும் மொத்தமுள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 137 இடங்களை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. அதிமுக 2 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல, 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 993 இடங்களை திமுக கூட்டணி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 216 வார்டுகள் கிடைத்துள்ளன. தனித்துப் போட்டியிட்ட பாமக 34 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு வரும் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடக்கிறது. பெரும்பாலான இடங்களை பிடித்துள்ள திமுக, 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுகிறது. துணைத் தலைவர் பதவிகளும் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (அக். 14) தன் ட்விட்டர் பக்கத்தில், "உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்" என பதிவிட்டுள்ளார்.