தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 14-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும்.
15-ம் தேதி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 15-ம் தேதி ஆந்திரா-ஒடிசாகடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 16-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசும்.எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.