தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்தாலும், ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் விஷத்துக்கு சமம் என்கின்றனர். எனவே, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் இருந்து விலை கொடுத்து வாங்கி பயோ - டீசல் தயாரிக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வருகின்றன.
கோவையில் இதுவரை நடைபெற்றுள்ள 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 5.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கோவையில் இதுவரை 93 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை அதிக சதவீதம் பேர் செலுத்திக்கொண்ட மாவட்டமாக கோவை உள்ளது.
பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. கோவையில் மண்டலம் வாரியாக வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிக்காக 5 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழகத்தில் அதற்கான பணிகள் தொடங்கும். விரைவில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 800 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெங்கு பாதித்த 342 பேர் தற்போது தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது குறித்து உள்ளாட்சிஅமைப்புகள் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்தாலும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. தனியார் ஆய்வகங்களில் முறைகேடுகளை தவிர்க்க, அங்கு பரிசோதனை செய்யப்படும் மாதிரிகளில் 5 சதவீதத்தை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் தரத்தை பரிசோதிக்கிறோம். சேலம், ஈரோட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.
கரோனா காலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கும் பணி, இன்னும் ஒரு வார காலத்துக்குள் தொடங்கும் என்றார். ஆட்சியர்ஜி.எஸ்.சமீரன், டீன் டாக்டர் நிர்மலா கலந்துகொண்டனர்.