தமிழகம்

பரோட்டா சாப்பிட்டு, குளிர்பானம் அருந்திய தாய், மகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்ட தாய், மகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி தங்கப்பநகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் இளங்கோவன். இவரது மனைவி கற்பகம்(33). இவர் தனது மகள் தர்ஷினியுடன்(7) நேற்று முன்தினம் இரவுகடலையூர் சாலையில் உள்ள ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பின்னர் இருவரும் வீட்டின் அருகே கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தி உள்ளனர். இந்நிலையில், வீட்டுக்கு சென்ற கற்பகமும், தர்ஷினியும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

இதைப்பார்த்த உறவினர்கள் உடனடியாக இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.

அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, கற்பகமும், தர்ஷினியும் உயிரிழந்தனர்.

கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், கற்பகம் சாப்பிட்ட ஹோட்டல் மற்றும் குளிர்பானம் வாங்கி கடையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, உணவு மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இருவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்களது இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT